Rock Fort Times
Online News

“இந்தியா” கூட்டணி வலிமை இழந்துள்ளதா? -திருச்சியில் திருமாவளவன் பதில்…!

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் உள்ள காலி மைதானத்தை தாங்கள் பயன்படுத்த பட்டியலின மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஆணை பெற்ற நிலையில், காவல்துறையினர் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அவரை அரசு அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் சந்திக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை தலைமை இயக்குனர், தலைமைச் செயலாளர் ஆகியோர் அவரை முறைப்படி அழைக்க செல்லவில்லை. நீதிபதியே இதனை வேதனையோடு சுட்டிக்காட்டி உள்ளார். பாஜக அரசு தலித்துகளை எவ்வாறு நடத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணிதான் ஒரு கூட்டணி என்கிற வடிவத்தோடு உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணிஅந்த வடிவத்தை எட்டவில்லை. அதிமுகவும் பாஜகவும் நாங்கள் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என அறிவித்துள்ளார்கள். ஆனால் அது தொடருமா? என்பது தெரியாது. அதே கூட்டணியில் இடம்பெற்று இருந்த பாமக இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர்கள் எந்த அணியில் உள்ளார்கள்? என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. தேமுதிக என்ன செய்யும்? என்று யாருக்கும் தெரியாது. நடிகர் விஜய் அதிமுக கூட்டணியில் இடம் பெறுவார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் இடம் பெறுவாரா? என்பது தெரியாது. எதிர்க்கட்சிகளிடையே ஒரு ஐக்கியம் உருவாவதற்கு போதிய முகாந்திரம் இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலை பொருத்தவரையில் திமுக கூட்டணி தான் மக்கள் செல்வாக்கோடு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா கூட்டணி வலிமை இழந்துள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, தேசிய அளவில் இன்னும் இந்தியா கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் அவர் தெரிவித்திருக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வலிமையாக உள்ளது. இந்தியா முழுவதும் இந்த கூட்டணிக்கு வழிகாட்டியாகவும் உள்ளது. இந்தியா கூட்டணி தேவையான நேரத்தில் பாஜகவிற்கு சவால் விடக்கூடிய அளவிற்கு நடவடிக்கையில் ஈடுபடும். பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்ப்பதுதான் இக் கூட்டணியின் நோக்கம் என்றார். பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்