Rock Fort Times
Online News

திருச்சியில் டாஸ்மாக்கை அகற்றக்கோரி உண்ணாவிரதம் ! அனுமதி மறுத்த காவல்துறை உயர் நீதிமன்றம் சென்று உரிமை மீட்ட அமமுக, டிசம்பர் -2ல் செய்யப்போகும் சம்பவம்..!

திருச்சியில் மக்கள் எதிர்ப்பை மீறி செயல்படும் வயலூர் ரோடு, சீனிவாசநகர் டாஸ்மாக் பார் மற்றும் உறையூர் லிங்கநகர் மனமகிழ் மன்றம் ஆகியவற்றை நிரந்தரமாக அகற்றக்கோரி, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் ப.செந்தில்நாதன் தலைமையில் அக்கட்சியினர் கடந்த நவம்பர் 1 மற்றும் 8ம் தேதிகளில் காவல்துறை அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட கட்சியினரும், பொதுமக்களும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு பின் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் சீனிவாச நகர் டாஸ்மாக் பார் மற்றும் உறையூர் லிங்கநகர் மனமகிழ் மன்றம் ஆகியவற்றை நிரந்தரமாக அப்புறப்படுத்த கோரி அமமுக சார்பில்
வருகிற டிசம்பர் 2ம் தேதி நடைபெற இருக்கிற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கும்படி உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அமமுக நடத்தப்போகும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளார். இதனால், திருச்சி மாநகர அமமுகவினர் கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இது குறித்து செந்தில்நாதனிடம் பேசினோம். அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது.,
” தமிழ்நாட்டின் வேறு எந்த மாவட்ட தலைநகரத்திலும் இல்லாத அளவுக்கு திருச்சியில் மதுபோதை பேயாட்டம் ஆடுகிறது.திருச்சி மாநகர பகுதிகளில் இயங்கி வரும் பெரும்பாலான டாஸ்மாக் பார் மற்றும் மனமகிழ் மன்றங்களில் 24 மணி நேரமும் சரக்கு விற்பனை கனஜோராக நடைபெறுகிறது. இதை தடுத்து விற்பனை நேரத்தை முறைப்படுத்த வேண்டிய தமிழக அரசு கண்டும் காணாமல் இருப்பதோடு கரன்சிகளை வாங்கி குவித்து கஜானாவை நிரப்புகின்ற விஷயத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்படுகிறது. மாநகரத்தில் அதிகரிக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அனைத்திற்கும் மது போதை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக வயலூர் ரோடு சீனிவாசன் நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் பார் மற்றும் உறையூர் லிங்க நகரில் இயங்கி வரும் மனமகிழ் மன்றம் ஆகியவை உழைக்கும் வர்க்கத்தினரின் ரத்தத்தை சத்தமே இல்லாமல் உறிஞ்சும் வேலையை செய்து வருகின்றன. இவ்விரு இடங்களிலும் இயங்கி வரும் டாஸ்மாக் பார்களை சுற்றி குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை இருக்கிறது. எனவே இங்கு செயல்படும் டாஸ்மாக் பார்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நவம்பர் 1 மற்றும் 8ம் தேதிகளில் எங்கள் கட்சி சார்பில் எனது தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த, திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டோம். அனுமதி மறுத்த காவல்துறை, தடையை மீறி உண்ணாவிரதம் இருந்ததாக என்னையும் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களையும் கைது செய்து தனியார் திருமணத்தில் அடைத்தது.பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராட வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை. அதைத்தான் நாங்கள் செய்தோம்? ஆனால், ஆளுங்கட்சியின் இமேஜ் டேமேஜ் ஆகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் காவல்துறை, எங்களது உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டது. ஆகவே, சீனிவாச நகர் மற்றும் உறையூர், லிங்கநகர் டாஸ்மாக் பார்களை அகற்றக் கோரி அமமுக சார்பில் நடத்தப் போகும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தோம். இதை விசாரித்த நீதியரசர் உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளித்துள்ளார். ஆகவே வருகிற டிசம்பர் 2ம் தேதி திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது தலைமையில் கட்சியினரும், பொதுமக்களும், பெண்களும் ஒன்றிணைந்து மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். மக்களை சீர்குலைக்கும் டாஸ்மாக் பார்களுக்கு எதிரான எங்களது ஜனநாயக போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு வருகிற டிசம்பர் 2ம் தேதி நாங்கள் மேற்கொள்ள போகும் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்ப புள்ளியே” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்