திருச்சி, அரியமங்கலம் லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கார் ஒன்று நீண்ட நேரம் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரின் கதவை திறந்து பார்த்தபோது காரின் பின் இருக்கையில் ஒருவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த காரின் பதிவெண்ணை வைத்து அவர் யார்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஆங்கரை மலையப்பன் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரவீன்குமார் (30) என்பதும், திருச்சி அரிஸ்டோ பகுதியில் உள்ள வாடகை ஸ்டாண்டில் இருந்து வாடகைக்கு கார் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. மேலும், பிரவீன் குமார் நேற்று( மார்ச் 2) காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து சவாரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை என்பதும் தெரிய வந்தது. திருச்சி அரியமங்கலம் பகுதிக்கு அவர் சவாரி வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக வந்தாரா? என்று தெரியவில்லை. அப்படியே வந்திருந்தாலும் முன் இருக்கையில் இருக்க வேண்டிய டிரைவர், பின் இருக்கையில் இறந்து கிடந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்தார்களா என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.