அதிகாரிகளுடன் வாக்குவாதம்: கரூர் காங்கிரஸ் எம்.பி, அதிமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு…!
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடு கட்டி வசித்து வருவதாகவும், கோவிலுக்கு சொந்தமான அந்த இடத்தை பொதுமக்கள் காலி செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த 10 நாட்களாக கோவிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கோவில் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் இன்று(20-11-2025) வெண்ணைமலை அருகே இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் இடம் எனக் கூறப்படும் பகுதிக்கு நடவடிக்கை மேற்கொள்ள சென்றனர். அப்போது அங்கு இருந்த 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அந்த நேரத்தில் திடீரென ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட மூவர் தாங்கள் வைத்திருந்த மண் எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்ததோடு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அறிவுரை கூறினர்.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோர் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுப்படி தான் நடவடிக்கை எடுக்கிறோம், நீங்கள் வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை ஆணை வாங்குங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினரிடையே மீண்டும் வாக்குவாதம் வலுத்தது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதால் கரூர் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் எம்.பி ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். எம்பி மற்றும் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதால் கரூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Comments are closed.