திருச்சியில் மதுவிலக்கு பிரிவில் டிஎஸ்பியாக இருந்தவர் முத்தரசு(வயது 54). இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு நெல்லை மாவட்ட ஆவண காப்பக டிஎஸ்பியாக சில மாதங்களுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், அவர் குறுகிய காலத்தில் அங்கிருந்து திருச்சிக்கு மீண்டும் மாறுதலாகி நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக ஒரு மாதத்திற்கு முன் பதவி ஏற்றார். அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. பல இடங்களில் அவர் லஞ்சம் பெற்றதாக வந்த தகவலையடுத்து, இன்று ( 05.12.2023 ) காலை திருச்சி விமான நிலையம் அருகே மொராய் சிட்டியில் உள்ள டிஎஸ்பி முத்தரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமச்சந்திரா தலைமையிலான 5 பேர் அடங்கிய குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டிஎஸ்பி வீட்டில் நடைபெறும் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிஎஸ்பி முத்தரசு, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தஞ்சையில் உள்ள அவரது தந்தை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.