திருச்சி கருமண்டபம் மெயின் ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. இந்த கிளையின் வளாகத்தில் ஏடிஎம் மையம் உள்ளது.இந்த நிலையில் இன்று விடியற்காலை ஏடிஎம் மையத்தில் ஒரு மர்ம கும்பல் உள்ளே புகுந்து கடப்பாரை கொண்டு ஏடிஎம் எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்பொழுது ரோந்து போலீசார் வாகன மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு அந்த வழியாக சென்றனர்.சிறிது தூரம் சென்ற பிறகு ஏ.டி.எம்.மையத்தில் இருந்து திடீரென்று ஏதோ சத்தம் கேட்கிறது என்று நினைத்து காரில் சென்ற போலீசார் மீண்டும் ஏடிஎம் மையத்திற்கு திரும்பி வந்தனர். அப்பொழுது ஏடிஎம் மையத்திலிருந்து மர்ம கொள்ளையர்கள் சிலர் வேகமாக வெளியே ஓடினார்கள். இதனை பார்த்த போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பிறகு ஏடிஎம் மையம் சென்று போய் பார்த்தபொழுது அங்கு கடப்பாறை கொண்டு ஏடிஎம் எந்திரத்தை கொள்ளையர்கள் உடைக்க முயற்சி செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து ரோந்து பணி போலீசார் உடனடியாக செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். உரிய நேரத்தில் போலீசார் அங்குவந்த காரணத்தால் ரூபாய் பல லட்சம் பணம் தப்பியது.மேலும் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை வைத்து ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் கருமண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.