Rock Fort Times
Online News

திருவண்ணாமலைக்கு பலத்த மழை எச்சரிக்கை: கிரிவலத்துக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்…!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக புகழ் பெற்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்று  வழிபட்டு வருகின்றனர். ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் மலையை வலம் வந்து வழிபடும் வழக்கம் உள்ளது.  திருவண்ணாமலையில் அனைத்து நாட்களும் கிரிவலம் செல்லலாம் என்றாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி நாளிலேயே கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் தொடர்ந்து 12 ஆண்டுகள் கிரிவலம் வருபவர்களுக்கு வாழ்வில் துன்பம் இருக்காது என்று நம்பப்படுகிறது.  அவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்பதும் ஐதீகமாகும். எனவே இந்த புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி இன்று அக்டோபர் 16-ந்தேதி புதன்கிழமை இரவு  8 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் வியாழக்கிழமை 17-ந்தேதி மாலை 5.38 மணிக்கு நிறைவுபெறுகிறது.  புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு வசதியாக, சேலம் புறநகர் பேருந்து நிலையம், ஆத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு பேருந்து நிலையங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களும் கிரிவலம் செல்ல தயாராக இருந்தனர். இந்த நிலையில் திடீரென வெளுத்து வாங்கிய கன மழையால் வட மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. மேலும் இன்றும் நாளையும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவண்ணாமலைக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், இந்த முறை பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்