நீட் தேர்வை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே முன்னோடியாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. நமது மாநிலத்தில் பல்லாண்டுகளாக பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக்கல்வி முறையே இந்த சாதனைகளுக்கு அடிப்படை. 2006ம் ஆண்டில், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழிற்பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து +2 பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை முறையை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி உருவாக்கினார்.சமூகநீதியை நிலைநாட்டி, கிராமப்புறங்களில் வாழக்கூடிய ஏழை. எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கக்கூடிய இந்த முறையால்தான் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பயனாக, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறோம். ஆனால், நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர், இந்தத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற இயலாத கிராமப்புற மாணவர்களுக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு எட்டாக்கனி ஆகிவிட்டது.
மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளிலும், பின்தங்கிய பகுதிகளிலும் வழங்கப்படும் மருத்துவச் சேவைகளையும் எதிர்காலத்தில் இந்த முறை பாதிக்கும். நீட் தேர்வானது பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது, இந்தத் தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சமூகநீதிக்கு எதிரானதாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், சமூகச் சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் உள்ள கருத்தொற்றுமையின் அடிப்படையில், சரியான மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்து பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழுவினை இந்த அரசு அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்தச் சட்டமன்றப் பேரவையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் -2021 என்ற சட்ட முன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்படாமல் மறுபரிசீலனைச் செய்திட திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை, ஆயுஷ் துறை, உயர்கல்வித் துறை என பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசு உரிய விளக்கங்களையும் வழங்கியது. ஆனால் இவற்றையெல்லாம் ஏற்காமல், மத்திய . நீட் விலக்குச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளது என்ற வருந்தத்தக்க செய்தியை இந்தப் பேரவையில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Comments are closed.